கோவில் கும்பாபிஷேகம்

Friday, December 29, 2017

வீடுகளில் விரிசல்: சிமென்ட் ஆலை லாரிகளை சிறைபிடித்து போராட்டம்

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே சுண்ணாம்புக் கல் ஏற்றிவந்த லாரிகளை சிறைபிடித்து வாழைக்குழி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் கல்லக்குடி, அரியலூரில் இயங்கி வரும் தனியார் சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான சுண்ணாம்பு சுரங்கம் பெரியதிருக்கோணம் பகுதியில் உள்ளது. இந்தச் சுரங்கத்தில் சுண்ணாம்புக் கற்களை வெட்டிஎடுக்க அவ்வப்போது வெடி பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால், சுண்ணாம்புக்கல் சுரங்கம் அருகேயுள்ள வாழைக்குழி கிராமத்தில் உள்ள பல வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இரவு நேரங்களில் வெடிச் சத்தத்தால் தூங்க முடியவில்லை எனவும்,  சுண்ணாம்புக் கற்களை ஏற்றி வேகமாகச் செல்லும் லாரிகளால் அதிக புழுதி ஏற்படுவதாகவும் கூறி வாழைக்குழி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை அவ்வழியே சுண்ணாம்புக் கல் ஏற்றி வந்த 50-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கீழப்பழுவூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் வெடி உபயோகிக்காமல், பிரேக்கர் கொண்டு கற்களை வெட்டி எடுப்பதாகவும், பாரம் ஏற்றி வரும் லாரிகளை இனி மெதுவாக இயக்கிச் செல்வதாகவும்  கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் வாழைக்குழி கிராமத்தில் சுமார் 1 மணிநேரம் நீடித்தது.


Sunday, December 17, 2017

தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு முகாம் - ஆலந்துறையார் கட்டளை

தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு முகாம்

By DIN  |   Published on : 18th December 2017 05:36 AM  |   அ+அ அ-   |  
அரியலூர் மாவட்டம் செந்துறை, உஞ்சினி, ஆலந்துறையார் கட்டளை ஆகிய பகுதிகளில் உள்ள சுண்ணாம்புக் கல் சுரங்கங்களில் செட்டிநாடு சிமென்ட் கார்ப்பரேசன், இந்தியன் பீரோ ஆப் மைன்ஸ் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆலைத் தலைவர் எம். சுந்தரமூர்த்தி, சுரங்கத் தலைவர் ஜி. ரகுநாதன் சிங் ஆகியோர் தலைமை வகித்து, தூய்மை இந்தியா திட்டம், சுரங்கப் பராமரிப்பு ஆகியவை குறித்து தொழிலாளர்களிடம் விளக்கினர். மேலும் அவர்கள் சுரங்கத்தைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்களிடம் நன்னடத்தை குறித்து விளக்கினர்.
சுரங்கப் பொதுமேலாளர் ஏ.மரிய பார்லாண்ட், கணக்கியல் துறை பொதுமேலாளர் எம்.ஜெயப் பிரகாஷ் காந்த், சுற்றுச்சூழல் துறை மேலாளர் பி. தனபாலன் மற்றும் சுரங்க அதிகாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.