கோவில் கும்பாபிஷேகம்

Thursday, December 9, 2010

தினம் ஒரு தகவல் : எளிமை

எளிமை

மகாத்மா காந்தி தனது துணிகளைத் தாமே துவைத்து சலவை செய்தார். தமக்குத் தாமே தலைமுடி வெட்டிக் கொண்டார். தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியதும், காந்தி தனது மனைவி கஸ்தூரிபாவுடன் நாட்டு நிலவரம் அறிய, நீண்ட பயணம் மேற்கொண்டார்.

ஒரு பித்தளைப் பாத்திரம், முரட்டுக் கம்பளியினாலான ஒரு மேற்சட்டை, ஒரு வேட்டி, ஒரு துண்டு, ஒரு உள் சட்டை, ஒரு துப்பட்டி, தண்ணீர்ச் செம்பு அடங்கிய ஒரு சாக்குப் பையுடன் இந்தியா முழுவதும் சுற்றி வந்தார். நாள்காட்டித் தாள் உட்பட எந்தத் தாளையும் கிழித்தெறியாமல் குறிப்பு எழுதப் பயன்படுத்தினார்.

தேசப்பிதா பீகாரில் பயணம் செய்தபோது, அவருக்கு உதவியாக இருந்த மனுபென், காந்தி பயன்படுத்தும் பென்சில் மிகவும் சிறியதாகி விட்டதால், அதை மாற்றி ஒரு புது பென்சிலை வைத்தார். மகாத்மா நள்ளிரவில் மனுவை எழுப்பி, "எனது சிறிய பென்சிலைக் கொண்டு வா" என்றார். தூக்கக் கலக்கத்தில் தேடிய மனு கையில் அந்தச் சிறிய பென்சில் சிக்கவில்லை. "சரி, காலையில் தேடு. இப்போது தூங்கு" என்றார் பாபுஜி.

விடியற்காலை மூன்றரை மணிக்குப் பிரார்த்தனை முடிந்ததும் மனுவிடம் பென்சிலை நினைவூட்டினார். அதிக நேரம் தேடி ஒரு வழியாக அந்தப் பென்சிலைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்த மனுவிடம். "கிடைத்து விட்டதா? நல்லது இப்போது தேவையில்லை. பத்திரமாக எடுத்து வை!" என்று அண்ணல் சொன்னதும் மனுவுக்கு உள்ளூரக் கோபம் வந்தது. டில்லி திரும்பியதும் இரு வாரம் கழிந்து அந்தப் பென்சிலை பாபுஜி கேட்டதும் மனு கொண்டு வந்து கொடுத்ததார். "மகளே, நீ என் சோதனையில் தேறிவிட்டாய். நமது நாட்டின் ஏழ்மையை நீ அறிவாய். பல்லாயிரக்கணக்கான சிறுவர்களுக்கு இந்தச் சிறிய பென்சில்கூட இல்லை. இதைத் தூக்கி எறிவதற்கு பதிலாக இன்னும் எவ்வளவோ எழுதலாம். ஒரு துண்டு பென்சில் ஒரு துண்டுத் தங்கத்துக்குச் சமம்!" என்றார் மகாத்மா.

எல்லா வசதிகளும், அனுபவிக்க வாய்ப்புகளும் ஆண்டவன் வழங்கியிருந்தபோதும், ஒன்றும் இல்லாதவனைப் போல் வாழ்வதே எளிமை. பகட்டிலும் ஆடம்பரத்திலும்தான் சமூக கெளரவம் இருப்பதாக, நாம் மாயச் சிந்தனையில் மயங்கிக் கிடக்கிறோம். உண்மையில், நாம் ஒவ்வொரு நாளும் நமக்காக வாழ்வதே இல்லை. ஏதோவொரு வகையில் நம்மை ஊர் மெச்ச வேண்டும் என்றே விரும்புகிறோம். இதுவே அநாவசியத் தேவைகளில் நம்மை அலைக்கழிக்கிறது. தேவைகளின் பெருக்கத்தில் நிம்மதி பறிபோகிறது.

நான்கு சுவருக்குள் இருக்கும்போது நாற்பது ரூபாய் நூல் புடவையில் நிறைவு காணும் பெண் மனம், உறவுகள் சங்கமிக்கும் திருமண விழாவில் பத்தாயிரம் ரூபாய் பட்டுப் புடவையில்தான் பரவசம் கொள்கிறது. பிறர் பார்ப்பதற்காகத்தான் நம் அனைவருக்கும் ஆடம்பரம் அவசியப்படுகிறது. இந்த உதாரணம் எந்த ஒரு பெண்ணையும் குற்றம் அல்லது குறை கூறுவதற்காக கூறப்படவில்லை. எளிமையின் இலக்கணத்திற்காக கூறப்பட்டது.

எளிமைக்கான உதாரணங்கள்:

·         எளிமைக்கு சமூக கெளரவம் சாத்தியம் இல்லையெனில், அரை நிர்வாண காந்தியை அகிலமே தொழுததே… அது எப்படி?

·         குவித்து வைக்கும் செல்வத்தால்தான் சிறப்பு வந்து சேரும் என்றால், கூரையைத் தவிர வேறெந்த சொத்தும் இல்லாத தோழர் ஜீவாவை இன்றும் சமூகம் போற்றுகிறதே…அதன் இரகசியம் என்ன?

·         காமராஜர் கண்மூடினார். அவர் வாழ்ந்த வீட்டை அதன் உரிமையாளர் எடுத்துக் கொண்டார். அவர் பயன்படுத்திய காரைக் கட்சி எடுத்துக் கொண்டது. அவருடைய உடலை நெருப்பு எடுத்துக் கொண்டது. அவரது பெயரை வரலாறு எடுத்துக் கொண்டது.

·         காந்தியடிகள் வலியுறுத்திய மதுவிலக்கு, தீண்டாமை என்ற காரணத்திற்காக, மதுவை ஒழிக்க சேலம் தாதம்பட்டியில் தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை ஒரே நாளில் வெட்டினார் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். கதர் மூட்டையைத் தலையிலும் இராட்டையைத் தோளிலும் சுமந்து ஊர்தோறும் சென்று கதரைப் பரப்பினார்.

·         எளிமையின் சின்னமாக விளங்கியவர் நேரு. ஒரு முறை காங்கிரஸ் செயற்குழு கூடியபோது இடைவெளியில் நிஜலிங்கப்பா, 'உங்களைப் போன்ற செல்வச்சீமான்களா நாங்கள்?' என்று சொன்னதும், 'என் சட்டையைப் பாருங்கள். கிழிந்த இடத்தில் தையல் போட்டிருக்கேன். செல்வச் சீமானின் சட்டை இப்படியா இருக்கும்? பிரதமர் சம்பளத்தில் செலவு போக மிஞ்சுவது மாதம்தோறும் ஒன்பது ரூபாய்தான்' என்று எளிமையின் இலக்கணமாக கூறினார்.

 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க