கோவில் கும்பாபிஷேகம்

Monday, December 27, 2010

தினம் ஒரு தகவல்

பற்றற்ற நிலை:

 

பெரிய பணக்காரன் ஒருவன், ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஆயிரம் பொற்காசுகளை அன்பளிப்பாக அளிக்க விரும்பினான். பரமஹம்சர் வாங்க மறுத்தார். பணக்காரனோ விடாமல் வற்புறுத்தினான். "சரிஉன் மன நிம்மதிக்காக பெற்றுக் கொள்கிறேன். இனி, நான் விரும்பியபடி இதைச் செலவழிக்கத் தடையில்லையே?" என்று கேட்டார் பரமஹம்சர். "ஒரு தடையும் இல்லை!" என்றான் செல்வந்தன்.

 

"இந்த ஆயிரம் பொற்காசுகளையும் கொண்டு போய் கங்கையில் எறிந்துவிட்டு வா!" என்றார் அந்த மகான். பணக்காரன் அதிர்ந்து போனான். ஆனாலும் அவருடைய கட்டளைப்படி கங்கைக் கரைக்குச் சென்றவன் மிகுந்த துயரத்துடன் ஒவ்வொரு பொற்காசாக எடுத்து நீரில் எறிந்தபடி நின்றான். அரை மணி நேரம் கடந்தும் அவன் திரும்பாததால் ராமகிருஷ்ணர் கரைக்குச் சென்று பார்த்தார். ஒவ்வொறு பொற்காசாக நீரில் எறிந்து கொண்டிருந்தவனிடம், "என்ன முட்டாள்தனம் இது? ஒரேடியாக ஒரு கணப்பொழுதில் வீசியெறிந்துவிட்டு, விரைவாக திரும்பாமல் ஏன் ஒவ்வொன்றாக எண்ணி எறிகிறாய்?" என்று கேட்டார்.

 

"ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக நான் சேமித்த நாணயங்களை ஒரே கணத்தில் வீசி எறிந்துவிட மனம் வரவில்லை". அதனால்தான் ஒவ்வொன்றாக நீரில் எறிந்தபடி நிற்கிறேன் என்றான் செல்வந்தன். அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்ட பரமஹம்சர், "இழப்பதற்கு முடிவெடுத்து விட்டால், ஒரே கணத்தில் இழந்துவிட வேண்டும்" என்றார். நம்மால் அந்தப் பணக்காரனைப் போல் ஒவ்வொன்றாக இழப்பதற்குக்கூட முடிவதில்லை.

 

எளிமை:

 

ஜனகர் ஒரு நாள் விலையுயர்ந்த ஆடை-அணிகலன்களுடன் அறுசுவை விருந்துண்டு, உடலை வருத்தாத மெல்லிய மெத்தையில் படுத்து உறங்கினார். அப்போது அவருக்கு ஒரு கனவு!

 

பகையரசனிடம் நாட்டைப் பறிகொடுத்து, கந்தலாடையில் ஒரு பிச்சைக்காரனைப் போல் பசியால் வாடித் தவிப்பதாகக் கனவு கண்டார். திடுக்கிட்டு விழித்தவர் சிந்தனையில் ஆழ்ந்தார். கனவு, தன்னைப் பிச்சைக்காரனாக்கிவிட்டதே என்று கவலை கொண்டார். 'உண்மையில் நான் அரசனா? அல்லது பிச்சைக்காரனா?' என்ற ஐயம் அவருள் எழுந்தது. ஆத்மஞானம் அவரது கண்களைத் திறந்தது. அரசன், பிச்சைக்காரன் என்ற இரண்டு அபிமானங்களும் ஒழிந்து பேதமற்ற நிலையை அவர் பெற்றார்.

 

ஜனகரைப் போல் அனைவரும் ஆதல் எளிதன்று.

 

தியானம்:

 

ஜென் குருவிடம் ஒருவன் வந்து, 'எப்படி தியானத்தில் ஈடுபடுவது?' என்று கேட்டான். 'என்னைப் பார்த்துக் கொண்டிரு. தியானம் உனக்குக் கைவரும்' என்றார் ஜென். அவனும் சம்மதித்தான். காலையில் குரு எழுந்தார். குளித்தார். பகல் முழுவதும் தோட்ட வேலையில் ஈடுபட்டார். உணவு வேளையில் உண்டார். ஆனால் வழிபாடு, பிரார்த்தனை, தியானித்தல், படித்தல் என்றெல்லாம் செய்யவில்லை. இதில் மனம் சலித்த சீடன், 'எப்போது நான் தியானம் கற்பது?' என்றான். 'நான் குழி வெட்டியதும் தியானம்தான். தோட்டம் போட்டதும் தியானம்தான். உணவு உண்டதும் தியானம்தான். எனது வாழ்வே தியானம்தான். எனது வாழ்வில், தியானம் என்ற ஒன்று தனியாக இல்லை' என்று சிரித்தபடி சொன்னார் ஜென் குரு. மாசற்ற மனம் உள்ளவர் விழி மூடி அமர்ந்திருக்க அவசியமில்லை.

 

நாம் அனைவரும் ஜென் குரு அல்ல. ஆயிரம் எண்ணங்கள் அலையடிக்கும் மனது நம்முடையது. ஆசை, அச்சம், கோபம், காமம், வெறுப்பு, பகை என்ற சிலந்திவலைப் பின்னலில் சிக்கித் தவிப்பவர்கள். நெருப்புக்கும் வெள்ளத்துக்கும் நடுவில் நிற்பதுபோல், நல்ல எண்ணங்களும், தீய விருப்பங்களுக்கும் இடையில் நடப்பதே வாழ்க்கை. 'நல்லதையே நாடு' என்று அறிவு சொல்கிறது. எல்லாவற்றுக்கும் ஆசைப்படு என்று மனக் குரங்கு தினமும் பாடம் நடத்துகிறது. இந்தக குழப்பத்திலிருந்து எப்படி எப்போது நமக்கு விடுதலை என்பதுதான் கேள்வி?

 

நாம் ஒன்று செய்வோம். காலை-மாலை இரு வேளையும் தனிமையில் கொஞ்ச நேரம் கண்மூடி மெளனமாக அமர்ந்து உள்முகமாக யோசிப்போம்.

 

நமது பலம்-பலவீனம், நிறை-குறைகளை நெஞ்சில் நிறுத்தி அன்றாடம் அலசுவோம். தவறுகளைத் தவிர்க்க முடிவெடுப்போம். பகையை வேரறுத்து, அன்பை விதைத்து விருட்சமாக வளர்க்க முயலுவோம். ஒரே பிறவியில் புத்தனாக முடியாது என்கிறது பெளத்தம். ஒரே நாளில் நாம் அனைவரும் முனிவர்களாகிவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக மனதில் படிந்திருக்கும் அழுக்கை அகற்ற உள்முகத் தேடலில் ஈடுபடுவோம். எத்தனை நாள்தான் வெளியே தேடி, வாழ்வை வீணாக்குவது? விழிப்பு உணர்வு இல்லாத விலங்குகளா நாம்? தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு, தினமும் பத்து நிமிடமேனும் கண்மூடி தியானிப்போம்.

 

கனவில் தொடங்கிய பயணம்:

 

அகிலத்தை அதிர வைத்த பல திட்டங்களைப் போலவே, அரவிந்த் கண் மருத்துவமனையும் ஒரு கனவில் தொடங்கிய பயணம். 'இந்தியாவில் பலரும் தேவையே இல்லாமல் பார்வையை இழந்திருக்கிறார்கள்; அதைச் சரிசெய்ய வேண்டும்! என்று கனவு கண்டவர், ஒரு முன்னாள் பேராசிரியர். மெலிந்த உருவம் கொண்டவர். மதுரை மருத்துவக் கல்லூரியில் கண் நோய் பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்'. (நாம் எல்லோரும் அறிந்ததே. ஓய்வு பெற்ற பிறகு ஒருவரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று…)

 

ஒரு ஒடிசலான முதியவரின் கனவுக்கு உலகத்தையே அசைக்கும் சக்தி இருந்திருக்கிறது என்றால்? நாம் இன்னும் கனவு காணாமல் இருப்பதற்கு என்ன காரணம்? நமக்கு வயதாகிவிட்டது என்பதா? ஓய்வு பெற்றுவிட்டோம் என்பதா? இப்போதுதான் பணியில் சேர்ந்திருக்கிறோம் என்பதா? நமக்கு அதிகாரமே இல்லையா? நாம் இருப்பதிலேயே கடைநிலை ஊழியரா? உடல்நிலை ஒத்துழைக்காது என்பதா? மனநிலையா?

 

இதெல்லாம் வழக்கமாக மற்றவர்களையும் நம்மையும் ஏமாற்றிக் கொள்ள நாம் சொல்லும் காரணங்கள். நம் திறமைகளையும், திறன்களையும் முழு அளவில் பயன்படுத்தாமல் இருக்கச் சொல்லப்படும் சாக்குகள். ஆனால் இந்த மனிதரைப் பாருங்கள். ஐம்பத்தாறு வயதில் அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றபிறகு ஆரம்பித்து, உலகப் புகழ்பெற்ற அரவிந்த் கண் மருத்துவ மனையை ஏற்படுத்தியிருக்கிறார்.

 

நம்மில் பலபேர் இந்த வயதில் "ஓய்வு பெற்று விட்டேன்" என்று சொல்லிக்கொண்டு சாய்வு நாற்காலியில் சரிந்திருப்போம். அரவிந்தின் வாழ்க்கை முறை என்ன? "நாம் என்ன செய்கிறோமோ, அதைத்தான் நமது பணியாளர்களும் பின்பற்றுவார்கள்". நாளாவட்டத்தில் அது அவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிடும். 'இதைச் செய், அதைச் செய் என்று உத்தரவு மட்டுமே போட்டுக்கொண்டிருந்தால் அந்த நேரத்துக்கு அதைச் செய்வார்கள். ஆனால் சீக்கரமே எல்லாம் மறந்துவிடும். எப்போதுமே நாமே உதாரணமாக இருந்து வழிகாட்டுவதுதான் நிலைக்கும்'.

 

அரவிந்தின் மூத்த மருத்துவர்கள், எதையும் தாங்களே முன் நின்று செய்வார்கள். தாமே உதாரணமாக இருந்து வழி நடத்துவது என்பதுதான் அரவிந்தின் நாடித்துடிப்பு. 'நேரத்துக்கு வேலைக்கு வர வேண்டும் என்பதைத் தனியாக ஒவ்வொருவரிடமும் போய்ச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. நாம் தினம் தினம் நேரம் தவறாமல் வருவதை அவர்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள்; அதையே பின்பற்றத் தொடங்குகிறார்கள். மருத்துவமனையில் எங்காவது தூது தும்பு தென்பட்டால் நாங்களே அதைத் துடைப்போம். ஏதாவது கீழே விழுந்தால் நாங்களே குனிந்து பொறுக்கிப் போடுவோம். இதைக் கவனிக்கும் ஊழியர்களும் அச்சாக அதையே செய்கிறார்கள். நம்மை நாமே தொடர்ந்து சுயபரிசோதனை செய்து கொள்வதும், அடுத்த இலக்கை நோக்கி முன்னேறுவதும் அரவிந்தின் வாழ்க்கை முறைகள்'!

 

பலசுவாரஸ்யமான முரண்பாடுகள்! இவர்கள் மிகவும் மென்மையான மனிதர்கள்ஆனால் வேலை என்று வந்துவிட்டால் அடிமை போலப் பிழிந்தெடுத்துவிடுவார்கள். அதே சமயம், தானே முதல் ஆளாகக் களத்தில் நின்று உழைப்பார்கள். தங்கள் ஊழியர்களின் மேல் நிறைய அக்கறை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அவர்களைத் தத்தம் திறமையின் எல்லைவரைப் போய் நிற்க விரட்டுவார்கள். அந்த எல்லையைத் தொட்ட பிறகு 'இன்னம் கொஞ்சம் ஓடு!' என்பார்கள். மனிதர்களைப் பின்னாலிருந்து செலுத்திச் செலுத்தி, சாதிக்க முடியாத சாதனைகளைச் சாதிக்க வைப்பார்கள்.

 

அரவிந்தின் 'பேராசை' அதிகரித்துக் கொண்டே போகிறது. 'இது வரை எவ்வளவு செய்து முடித்திருக்கிறோம்' என்பது முக்கியமல்ல; இன்னும் எவ்வளவு மீதியிருக்கிறது? என்பதுதான் அவர்கள் அளவுகோல். இந்தியாவில் பார்வையின்மையை ஒழிப்பது என்பதில் ஆரம்பித்து, இப்போது உலக அளவிலேயே அதைச் செய்வது என்ற இலக்கை எடுத்துக் கொண்டுவிட்டார்கள்.

 

அரவிந்தின் கதையிலிருந்து ஒரு முக்கிய பாடம் கிடைக்கிறது என்றால், அது 'அகிலத்தை நம்மாலும் அசைக்க முடியும்' என்பதுதான். எல்லாமே ஒரு கனவிலிருந்துதான் ஆரம்பமாகிறது. 'யாராக இருந்தால் எனக்கென்ன? என்று அலட்சியம், எது நடந்தால் எனக்கென்ன என்ற மனநிலையும், அந்தக் கனவின் கை கால்கள்'.

 

அரவிந்த் கண் மருத்துவமனை சாதனை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்:

 

24 இலட்சம் கண் புறநோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள்.

2,86,000 காடராகட் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன ஒரு வருடத்திற்கு.

உலகத்திலேயே பெரிய கண் சிகிச்சை கல்வியகம் ஹார்வாட், ஜான்ஸ் ஹாப்கின்ஸ், யேல் போன்ற புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கழைலக்கழகங்களின் மாணவர்கள் பயிற்சிக்காக வருமிடம்.

அறுவை சகிச்சை செய்து கண்ணுக்குள்ளேயே பொருத்தப்படும் இன்ட்ரா ஆக்குலர் லென்சுகள் (IoL) சந்தைக்கு வந்தபொழுது இதன் விலை 5000 ரூபாய். இந்த லென்சுகளை தாமே உற்பத்தி செய்து 200 ரூபாய்க்கு விற்று, உலகின் IOL லென்சுகள் வரலாற்றில் புதிய சகாப்தம் படைத்த நிறுவனம்.

தொண்டு நிறுவனங்களுக்காக மட்டும் 60 இலட்சம் லென்சுகளை தயாரித்திருக்கிறார்கள்.

இந்தியா மட்டுமின்றி உலகின் 85 நாடுகளுக்கு IOL லென்சுகளை ஏற்றுமதி செய்கின்ற நிறுவனம்.

இங்குள்ள ஒவ்வொரு மருத்துவரும் வருடத்துக்க 2000 அறுவை சிகிச்சைகள் செய்கிறார்கள்.

ஒவ்வொரு மருத்துவரும் ஒரு நாளைக்கு சராசரியாக 25 முதல் 30 அறுவை சிகிச்சை செய்கிறார்கள். அதுவும் காலை ஏழுமணி முதல் முற்பகல் வரை மட்டுமே. பிற்பகலில் அறுவை சிகிச்சைகள் கிடையாது. அறுவை சிகிச்சை அறையை சுத்தப்படுத்தி அடுத்த நாளைக்குத் தயாராக்குவதற்காக இந்த இடைவெளி.

குறைந்த லாபம். நிறைவான சேவை!!!

 

Nandri : http://ceoblog.kapsystem.com/

 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க