கல்லூரிக் கல்வியோடு மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராக வேண்டும்
By அரியலூர்,
First Published : 29 March 2015 12:49 AM IST
கல்லூரிப் படிப்பு பயிலும் காலத்திலேயே மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலையின் பொது மேலாளர் ஆர். பாஸ்கரன்.
அரியலூர் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியின் 7 ஆம் ஆண்டு விழாவுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியதாவது: மாணவப்பருவம் என்ற மிகவும் முக்கியமான இந்தக் காலக்கட்டத்தில் தங்களது வாழ்க்கையின் அடித்தளத்தை மாணவர்கள் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும். கல்லூரியில் பயிலும் காலங்களிலேயே பல போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். மேலும், மாணவர்கள் அயராத ஊக்கத்துடன் உழைத்துப் படித்தால் வெற்றி நிச்சயம் என்றார் அவர்.
அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் கே. ரகுநாதன் பேசியது:
மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுவதன் மூலம் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். விளையாட்டுத் துறையினருக்கான ஒதுக்கீட்டின் மூலம் உயர் வேலை வாய்ப்புகளைப் பெற முடியும் என்றார்.
முன்னதாக, கல்லூரி மாணவர்கள் வி. கைகாட்டி முதல் கல்லூரி வளாகம் வரை தொடர் ஓட்டமாக வந்தனர். பல்கலைக்கழக அளவில் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க