உலகத்துக்கே சோறளந்த காவிரி டெல்டா கிராமங்களில் இன்று விவசாயப் பெருங்குடிகள், தலையில் கஞ்சிக்கூடையை சுமந்தபடி சித்தாள் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். 'கொள்ளா நீரும் கொள்ளும் இடம்' என்பார்கள் கொள்ளிடத்தை. கரை புரண்டு ஓடி காவியங்களில் இடம்பெற்ற அந்தக் கொள்ளிடத்தின் வடகரையில்தான் இந்த அவலம்.
ஏலாக்குறிச்சி, நாயக்கர்பாளையம், ஆண்டிப்பட்டாக்காடு, கரையான்குறிச்சி, வாண்டளையான் கட்டளை, உள்ளன்குடி, கோவிலூர், இழுப்பனக்குறிச்சி உள்பட கொள்ளிடத்தின் வடகரையில் இருக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள்தான் இப்படி இயல்பைத் தொலைத்திருக்கின்றன. நெல், கரும்பு, கடலை, உளுந்து, சோளம் என எக்காலமும் பச்சை பூத்துக் கிடக்கும் நிலங்கள், கடந்த மூன்று வருடங்களாக மனித பாதம் படாமல் வறண்டு கிடக்கின்றன. காரணம், வறட்சி. கொள்ளிடம் வறண்டு வெறும் மணல் காய்க்கும் மரமாக மாறிவிட்டது. கொள்ளிடத்தை நம்பி வாழ்ந்த விவசாயப் பெருங்குடிகள், கால்புதையும் வறண்ட மணலில் நடந்து அய்யம்பேட்டை, கும்பகோணம், ராஜகிரி, பாபநாசம் பகுதிகளில் நடக்கும் கட்டிட வேலைகளுக்கு சித்தாள்களாகவும், மம்பட்டி ஆள்களாவும் போய்ப் பிழைக்கிறார்கள்.
''ஒரு காலத்துல நாங்க பத்து பேத்துக்கு வேலை கொடுத்தவங்க. இன்னைக்கு இந்த மணக்காட்டுக்குள்ள பத்திருபது கிலோமீட்டர் நடந்து கொத்துவேலை பாக்க வேண்டியிருக்கு.. எல்லாம் எங்க தலவிதி. இந்த வானமும் பெய்வனான்னு அடைச்சுக் கிடக்கு. கொள்ளிடமே காஞ்சு கெடக்கும்போது, ஊரு வாய்க்கல்ல எப்படி தண்ணி வரும்? முன்னெல்லாம் களையடுக்க, நாத்து பறிக்க, கருதறுக்கன்னு காலாகாலத்துக்கும் ஊருக்காட்டுலயே வேலை இருந்துச்சு. புள்ளைகள மரநிழல்ல உக்காத்தி வச்சுட்டு வேலை செய்வோம். இப்ப பெருநிலம் வச்சிருக்கவங்களே வேற ஊருக்கு வேலை நாடிப் போய்க்கிட்டிருக்காங்க. எங்கள மாதிரி சின்ன விவசாயிங்க இனிமே விவசாயத்தை நம்பியெல்லாம் பொழக்க முடியாது'' - வருத்தம் தொனிக்க யதார்த்தம் பேசுகிறார் நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த நீலாவதி.
காசு கிடைக்கிறதோ இல்லையோ, விவசாயம் செய்தால் சாப்பாட்டு நெல் கிடைத்து விடும். நல்லது, கெட்டது எல்லாம் விவசாயத்தை நம்பித்தான். நெல் அறுக்கும் முன்பாகவே வயற்காட்டில் உளுந்தை இறைப்பார்கள். நெல்லை அறுத்து விற்கும் நேரத்தில் உளுந்து அறுவடைக்குத் தயாராக நிற்கும். அதை எடுத்ததும் இன்னொரு போகம் நெல், அல்லது கரும்போ, கடலையோ... நிலம் அமுதசுரபியைப்போல கேட்கக் கேட்க கொடுத்துக் கொண்டே இருக்கும். இன்று தண்ணீர் இன்றி மலடாகிக் கிடக்கும் நிலம் மனிதர்களுக்கு எப்படி கைகொடுக்கும்..?
கல்லணையில் பிரிந்து அணைக்கரை வழியாக மகேந்திரபள்ளி கடலில் கலக்கிறது கொள்ளிடம். மேட்டூர் அணை நிரம்பி, காவிரியில் மிகு தண்ணீர் வந்தால் மட்டுமே கொள்ளிடத்தில் தண்ணீர் வரும். ஒரு காலத்தில் மூன்றரை லட்சம் கனஅடி அளவுக்கெல்லாம் தண்ணீர் புரண்டோடி இருக்கிறது. கொள்ளிடத்தில் இருந்து பிரியும் புள்ளம்பாடி வாய்க்கால், புது ஆறு மூலமாகவே வடகரைப்பகுதி மக்கள் சாகுபடி செய்வார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக மழையும் பொய்த்து, காவிரியும் பொய்த்து விட்டதால் விவசாயம் கைநழுவி விட்டது. வாழ்க்கையை வறுமை கவ்விக்கொண்டது.
''எனக்கு 7 ஏக்கர் நிலம் இருக்கு. மோட்டார் கேணியும் வச்சிருக்கோம். என்ன பிரயோசனம்? மோட்டாருக்கு கரன்ட் இல்லை. ஒரு மணி நேரம் விட்டா நாலு மணி நேரம் நிறுத்திடுறான். கர்நாடகாகாரன் காவிரியை விடமாட்டேங்குறான். கரும்பு, நெல்லுன்னு விளைஞ்ச காடுக காஞ்சு போய் கிடக்கு. நாங்கள்லாம் சேத்து வச்சு திங்குற ஆட்கள் இல்லை. விளைஞ்சாத்தான் திங்கமுடியும். காதுல கிடக்குறது, கழுத்துல கிடக்கிறதெல்லாம் வித்து எத்தனை காலத்துக்குத் திங்குறது? புள்ளைக மூஞ்சியப் பாக்கவே பரிதாபமா இருக்கு. அதான் இங்கிட்டு கிளம்பிட்டோம். ஒருநாளைக்கு 200 ரூவா கூலி. அந்தக் காசுக்குத்தான் இந்தப் பொழப்பு'' - அலுத்துக்கொள்கிறார் செங்கராயன்கட்டளை அமுதா.
தினமும் அதிகாலை 7 மணிக்கு ஆண்களும், பெண்களும் அய்யம்பேட்டையில் வந்து குழுமுகிறார்கள். அங்கு வரும் கொத்தனார்களும், எஞ்சினியர்களும் தங்களுக்குத் தேவையான சித்தாள்களை அழைத்துச் செல்கிறார்கள். பலர் வேலை கிடைக்காமல் திரும்பிப் போவதும் உண்டு. காலை 7 மணிக்கு அய்யம்பேட்டை வரவேண்டும் என்றால், வீட்டில் நான்கு மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.
''காசு, பணம் இல்லாட்டியும் மானம், மருவாதியோட வாழ்ந்தவங்க நாங்க. யாருகிட்டயும் எதுக்காகவும் போயி நின்னது கிடையாது. நிலத்தை மட்டும்தான் நம்பியிருந்தோம். இன்னைக்கு நிலம் கைவிட்டிருச்சு. மோட்டாரை வச்சு இந்தமுறை ஒருபோகமாவது பண்ணிருவோம்னு முயற்சி செஞ்சேன். கையில வச்சிருந்த காசை இழந்ததுதான் மிச்சம். ஆடு, மாடுகளையும் வித்தாச்சு. இனிமே உழைச்சாத்தான் சாப்பாடு... இந்த ஆத்துமணல்ல நடந்து கரையேறுறதுக்குள்ள உசுரு போயிருது'' - கால் புதையும் மணலில் மூச்சுத் திணற நடக்கிறார் ஏலாக்குறிச்சி கதிரேசன்.
கொள்ளிட வடகரை யில் இருந்து சாலை மார்க்கமாக அய்யம்பேட்டை வருவதென்றால் 30 கி.மீ. பஸ்சுக்கு மட்டுமே 50 ரூபாய் ஆகிவிடும். ஆற்றில் இறங்கி நடந்தால் 3 கிலோமீட்டர்தான். மணலில் தடம்பதித்து நடந்து கரையேறுவதற்குள் நாக்குத் தள்ளிவிடும். சில நாட்களில் பாதையில் தண்ணீர் தேங்கிவிடும். அது பெரும்பாடு. உடல் நனைத்துத்தான் கரையேற வேண்டும்.
''ஊரைச் சுத்தி குளம் கிடக்கு சார். பெரிய ஏரியும் இருக்கு. தண்ணிவாசம் பட்டே வருஷமாச்சு. நாங்கள்லாம் பெரிசா படிக்கலே. கையில நிலம் இருக்கு, தண்ணிக்கு கொள்ளிடம் இருக்குன்னு நம்பிக்கையா இருந்துட்டோம். பலபேரு புள்ளைகளைக் கூட படிக்க வைக்காம விவசாயத்துல போட்டு இழுத்துட்டாங்க. ஆனா, இருக்கிற நிலையப் பாத்தா விவசாயமே பண்ணமுடியாது போலருக்கு. கஷ்டப்படுறதுல பிரச்னையில்லை. ஆனா கூலியாளா நின்னு ஏச்சு பேச்சு வாங்குறதுதான் மனசுக்குக் கஷ்டமா இருக்கு'' என்கிறார் கோவிலூர் வேலு. வேலு மம்பட்டி ஆள் வேலைக்குச் செல்கிறார். சிமென்ட்டைக் குழைத்து அள்ளிக்கொடுக்க வேண்டும்.
''வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லை. காலையில 4 மணிக்கு எழுந்து, சமைச்சு வச்சுட்டு நானும் கஞ்சித்தண்ணிய ஊத்திக்கிட்டுக் கிளம்பினா, வேலை முடிஞ்சு வீட்டுக்குத் திரும்ப ராத்திரி எட்டாயிரும். மூட்டை தூக்கணும்... கல்லெடுத்துப் போடணும்... சிமென்ட் குழைக்கணும். சொன்ன வேலையச் செய்யலன்னா நாளைக்குக் கூப்பிட மாட்டாங்க. சிசேரியன் பண்ணின உடம்பு. ஒத்துக்கமாட்டேங்குது. என்ன செய்ய முடியும்? நானும் முடியாதுன்னு உக்காந்துட்டா புள்ளைகளுக்கு யாரு கஞ்சி ஊத்துவா?'' - கேட்கிறார் ஏலாக்குறிச்சி ஜெயந்தி.
உலகத்துக்கே சோறிட்ட ஒரு பெரும் சமுதாயம் உணவுக்காக ஊர் கடந்து அலைகிறது. நிலங்களைப் போலவே நடந்து நடந்து அவர்களின் பாதமும், மனமும் வெடித்துக் கிடக்கின்றன.
டெல்டா மக்களுக்கு விவசாயம் தொழில் இல்லை. வாழ்க்கை. தொடர்ந்து இழைக்கப்படும் அநீதியால் மக்கள் பெருமளவு இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். நிலங்கள் கூறு போடப்படுகின்றன. கிராமங்கள் மனிதர்கள் அற்று வறண்டு வருகின்றன. நடுவர்மன்ற தீர்ப்பு கெஜட்டில் வெளியிடப்பட்டதால் காவிரித்தாய் மடைகடந்து ஓடிவந்து விடுவாள், எல்லாம் மாறிவிடும் என்று அரசியல்வாதிகள் நம்புகிறார்கள். ஆனால் விவசாயிகள் நம்பவில்லை. அவர்கள் ஏற்கனவே நிறைய பாடம் படித்திருக்கிறார்கள்.
- வெ.நீலகண்டன்
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்
.
Thanks to : http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=5144&id1=4&issue=20130408
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க