அரியலூர் அருகே வைப்பம் கிராமத்தில் கிராம பொது சேவை மையம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், கிராம மக்கள் மனு
அரியலூர் அருகேயுள்ள வைப்பம் கிராமத்தில் கிராம பொது சேவை மையம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு குறைகள் தொடர்பான மனுக்களை பெற்றார்.
கிராம பொது சேவை மையம்
அப்போது, அரியலூர் அருகேயுள்ள வைப்பம் மற்றும் ஆரனூர் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிம் மனு கொடுத்தனர். அதில், அரியலூரில் உள்ள இடையத்தாங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இடையத்தாங்குடி, வைப்பம், ஆரனூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இடையத்தாங்குடி ஊராட்சியில் கிராம பொது சேவை மைய கட்டிடம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கட்டிடம் கட்டுவதற்கு தகுதியான இடம் இடையத்தாங்குடி கிராமத்தில் இல்லை என சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் முடிவு செய்யப்பட்டு, வைப்பம் கிராமத்தில் கிராம பொதுசேவை மையம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு கட்டிடம் கட்டும் பணியை மேற்கொள்ளக்கூடிய நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் இடையூறு செய்கிறார்கள். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அந்த பொது சேவை மைய கட்டிடத்தை தங்களது ஊரில் (வைப்பம்) கட்ட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
சமுதாய கூடம்
செந்துறை அருகே வீராக்கன் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், அனைத்து சமுதாயத்தினரும் பயனடையும் வகையில் தங்களது பகுதியில் சமுதாயக்கூடம் கட்டுதவற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதேபோல் பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் கூறினார். மேலும் இந்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
நலத்திட்ட உதவிகள்
பின்னர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 12 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.26 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள் உள்பட மொத்தம் 57 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவீந்திரன், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சரஸ்வதி கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், புதுவாழ்வு திட்ட அலுவலர் சுதாதேவி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க