தொழில்முனைவோர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
By அரியலூர்,
First Published : 04 August 2014 05:17 AM IST
அரியலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் கடன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இத்திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் நகர மற்றும் கிராமப் பகுதிகளில் வசிக்கும் 18 வயது நிறைவடைந்த சுயதொழில் செய்ய விரும்பும் ஆண் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தில் உற்பத்தி சார்ந்த தொழில் தொடங்க அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரையிலும் வங்கிக் கடன் பெறும் வசதி உள்ளது.
இத்திட்டத்தில் உற்பத்திப் பிரிவில் ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட திட்டங்களுக்கும், சேவை பிரிவின் கீழ் ரூ. 5 லட்சத்துக்கு மேற்பட்ட திட்டங்களுக்கும் குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டம் நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் மாவட்டத் தொழில் மையம் வாயிலாகவும், கிராமப் பகுதிகளில் கதர் கிராம தொழில்கள் ஆணையம் வாயிலாகவும் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 2014-15 ஆம் நிதியாண்டுக்கு இலக்காக 80 திட்டங்களுக்கு ரூ.178.41 லட்சம் மானியத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் 30-9-2015 க்குள் இலக்கை அடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே ஆர்வமுள்ள தொழில் முனைவோர் அரியலூரில் கல்லூரிச் சாலையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 04329 - 224555, 9443413897 என்ற எண்ணிலோ, கதர் கிராமத் தொழில்கள் வாரியத்தை 044- 28351019, 9443728310, 9677840161 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
Nandri : www.dinamani.com
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க