கோவில் கும்பாபிஷேகம்

Monday, December 27, 2010

தினம் ஒரு தகவல்

பற்றற்ற நிலை:

 

பெரிய பணக்காரன் ஒருவன், ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஆயிரம் பொற்காசுகளை அன்பளிப்பாக அளிக்க விரும்பினான். பரமஹம்சர் வாங்க மறுத்தார். பணக்காரனோ விடாமல் வற்புறுத்தினான். "சரிஉன் மன நிம்மதிக்காக பெற்றுக் கொள்கிறேன். இனி, நான் விரும்பியபடி இதைச் செலவழிக்கத் தடையில்லையே?" என்று கேட்டார் பரமஹம்சர். "ஒரு தடையும் இல்லை!" என்றான் செல்வந்தன்.

 

"இந்த ஆயிரம் பொற்காசுகளையும் கொண்டு போய் கங்கையில் எறிந்துவிட்டு வா!" என்றார் அந்த மகான். பணக்காரன் அதிர்ந்து போனான். ஆனாலும் அவருடைய கட்டளைப்படி கங்கைக் கரைக்குச் சென்றவன் மிகுந்த துயரத்துடன் ஒவ்வொரு பொற்காசாக எடுத்து நீரில் எறிந்தபடி நின்றான். அரை மணி நேரம் கடந்தும் அவன் திரும்பாததால் ராமகிருஷ்ணர் கரைக்குச் சென்று பார்த்தார். ஒவ்வொறு பொற்காசாக நீரில் எறிந்து கொண்டிருந்தவனிடம், "என்ன முட்டாள்தனம் இது? ஒரேடியாக ஒரு கணப்பொழுதில் வீசியெறிந்துவிட்டு, விரைவாக திரும்பாமல் ஏன் ஒவ்வொன்றாக எண்ணி எறிகிறாய்?" என்று கேட்டார்.

 

"ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக நான் சேமித்த நாணயங்களை ஒரே கணத்தில் வீசி எறிந்துவிட மனம் வரவில்லை". அதனால்தான் ஒவ்வொன்றாக நீரில் எறிந்தபடி நிற்கிறேன் என்றான் செல்வந்தன். அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்ட பரமஹம்சர், "இழப்பதற்கு முடிவெடுத்து விட்டால், ஒரே கணத்தில் இழந்துவிட வேண்டும்" என்றார். நம்மால் அந்தப் பணக்காரனைப் போல் ஒவ்வொன்றாக இழப்பதற்குக்கூட முடிவதில்லை.

 

எளிமை:

 

ஜனகர் ஒரு நாள் விலையுயர்ந்த ஆடை-அணிகலன்களுடன் அறுசுவை விருந்துண்டு, உடலை வருத்தாத மெல்லிய மெத்தையில் படுத்து உறங்கினார். அப்போது அவருக்கு ஒரு கனவு!

 

பகையரசனிடம் நாட்டைப் பறிகொடுத்து, கந்தலாடையில் ஒரு பிச்சைக்காரனைப் போல் பசியால் வாடித் தவிப்பதாகக் கனவு கண்டார். திடுக்கிட்டு விழித்தவர் சிந்தனையில் ஆழ்ந்தார். கனவு, தன்னைப் பிச்சைக்காரனாக்கிவிட்டதே என்று கவலை கொண்டார். 'உண்மையில் நான் அரசனா? அல்லது பிச்சைக்காரனா?' என்ற ஐயம் அவருள் எழுந்தது. ஆத்மஞானம் அவரது கண்களைத் திறந்தது. அரசன், பிச்சைக்காரன் என்ற இரண்டு அபிமானங்களும் ஒழிந்து பேதமற்ற நிலையை அவர் பெற்றார்.

 

ஜனகரைப் போல் அனைவரும் ஆதல் எளிதன்று.

 

தியானம்:

 

ஜென் குருவிடம் ஒருவன் வந்து, 'எப்படி தியானத்தில் ஈடுபடுவது?' என்று கேட்டான். 'என்னைப் பார்த்துக் கொண்டிரு. தியானம் உனக்குக் கைவரும்' என்றார் ஜென். அவனும் சம்மதித்தான். காலையில் குரு எழுந்தார். குளித்தார். பகல் முழுவதும் தோட்ட வேலையில் ஈடுபட்டார். உணவு வேளையில் உண்டார். ஆனால் வழிபாடு, பிரார்த்தனை, தியானித்தல், படித்தல் என்றெல்லாம் செய்யவில்லை. இதில் மனம் சலித்த சீடன், 'எப்போது நான் தியானம் கற்பது?' என்றான். 'நான் குழி வெட்டியதும் தியானம்தான். தோட்டம் போட்டதும் தியானம்தான். உணவு உண்டதும் தியானம்தான். எனது வாழ்வே தியானம்தான். எனது வாழ்வில், தியானம் என்ற ஒன்று தனியாக இல்லை' என்று சிரித்தபடி சொன்னார் ஜென் குரு. மாசற்ற மனம் உள்ளவர் விழி மூடி அமர்ந்திருக்க அவசியமில்லை.

 

நாம் அனைவரும் ஜென் குரு அல்ல. ஆயிரம் எண்ணங்கள் அலையடிக்கும் மனது நம்முடையது. ஆசை, அச்சம், கோபம், காமம், வெறுப்பு, பகை என்ற சிலந்திவலைப் பின்னலில் சிக்கித் தவிப்பவர்கள். நெருப்புக்கும் வெள்ளத்துக்கும் நடுவில் நிற்பதுபோல், நல்ல எண்ணங்களும், தீய விருப்பங்களுக்கும் இடையில் நடப்பதே வாழ்க்கை. 'நல்லதையே நாடு' என்று அறிவு சொல்கிறது. எல்லாவற்றுக்கும் ஆசைப்படு என்று மனக் குரங்கு தினமும் பாடம் நடத்துகிறது. இந்தக குழப்பத்திலிருந்து எப்படி எப்போது நமக்கு விடுதலை என்பதுதான் கேள்வி?

 

நாம் ஒன்று செய்வோம். காலை-மாலை இரு வேளையும் தனிமையில் கொஞ்ச நேரம் கண்மூடி மெளனமாக அமர்ந்து உள்முகமாக யோசிப்போம்.

 

நமது பலம்-பலவீனம், நிறை-குறைகளை நெஞ்சில் நிறுத்தி அன்றாடம் அலசுவோம். தவறுகளைத் தவிர்க்க முடிவெடுப்போம். பகையை வேரறுத்து, அன்பை விதைத்து விருட்சமாக வளர்க்க முயலுவோம். ஒரே பிறவியில் புத்தனாக முடியாது என்கிறது பெளத்தம். ஒரே நாளில் நாம் அனைவரும் முனிவர்களாகிவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக மனதில் படிந்திருக்கும் அழுக்கை அகற்ற உள்முகத் தேடலில் ஈடுபடுவோம். எத்தனை நாள்தான் வெளியே தேடி, வாழ்வை வீணாக்குவது? விழிப்பு உணர்வு இல்லாத விலங்குகளா நாம்? தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு, தினமும் பத்து நிமிடமேனும் கண்மூடி தியானிப்போம்.

 

கனவில் தொடங்கிய பயணம்:

 

அகிலத்தை அதிர வைத்த பல திட்டங்களைப் போலவே, அரவிந்த் கண் மருத்துவமனையும் ஒரு கனவில் தொடங்கிய பயணம். 'இந்தியாவில் பலரும் தேவையே இல்லாமல் பார்வையை இழந்திருக்கிறார்கள்; அதைச் சரிசெய்ய வேண்டும்! என்று கனவு கண்டவர், ஒரு முன்னாள் பேராசிரியர். மெலிந்த உருவம் கொண்டவர். மதுரை மருத்துவக் கல்லூரியில் கண் நோய் பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்'. (நாம் எல்லோரும் அறிந்ததே. ஓய்வு பெற்ற பிறகு ஒருவரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று…)

 

ஒரு ஒடிசலான முதியவரின் கனவுக்கு உலகத்தையே அசைக்கும் சக்தி இருந்திருக்கிறது என்றால்? நாம் இன்னும் கனவு காணாமல் இருப்பதற்கு என்ன காரணம்? நமக்கு வயதாகிவிட்டது என்பதா? ஓய்வு பெற்றுவிட்டோம் என்பதா? இப்போதுதான் பணியில் சேர்ந்திருக்கிறோம் என்பதா? நமக்கு அதிகாரமே இல்லையா? நாம் இருப்பதிலேயே கடைநிலை ஊழியரா? உடல்நிலை ஒத்துழைக்காது என்பதா? மனநிலையா?

 

இதெல்லாம் வழக்கமாக மற்றவர்களையும் நம்மையும் ஏமாற்றிக் கொள்ள நாம் சொல்லும் காரணங்கள். நம் திறமைகளையும், திறன்களையும் முழு அளவில் பயன்படுத்தாமல் இருக்கச் சொல்லப்படும் சாக்குகள். ஆனால் இந்த மனிதரைப் பாருங்கள். ஐம்பத்தாறு வயதில் அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றபிறகு ஆரம்பித்து, உலகப் புகழ்பெற்ற அரவிந்த் கண் மருத்துவ மனையை ஏற்படுத்தியிருக்கிறார்.

 

நம்மில் பலபேர் இந்த வயதில் "ஓய்வு பெற்று விட்டேன்" என்று சொல்லிக்கொண்டு சாய்வு நாற்காலியில் சரிந்திருப்போம். அரவிந்தின் வாழ்க்கை முறை என்ன? "நாம் என்ன செய்கிறோமோ, அதைத்தான் நமது பணியாளர்களும் பின்பற்றுவார்கள்". நாளாவட்டத்தில் அது அவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிடும். 'இதைச் செய், அதைச் செய் என்று உத்தரவு மட்டுமே போட்டுக்கொண்டிருந்தால் அந்த நேரத்துக்கு அதைச் செய்வார்கள். ஆனால் சீக்கரமே எல்லாம் மறந்துவிடும். எப்போதுமே நாமே உதாரணமாக இருந்து வழிகாட்டுவதுதான் நிலைக்கும்'.

 

அரவிந்தின் மூத்த மருத்துவர்கள், எதையும் தாங்களே முன் நின்று செய்வார்கள். தாமே உதாரணமாக இருந்து வழி நடத்துவது என்பதுதான் அரவிந்தின் நாடித்துடிப்பு. 'நேரத்துக்கு வேலைக்கு வர வேண்டும் என்பதைத் தனியாக ஒவ்வொருவரிடமும் போய்ச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. நாம் தினம் தினம் நேரம் தவறாமல் வருவதை அவர்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள்; அதையே பின்பற்றத் தொடங்குகிறார்கள். மருத்துவமனையில் எங்காவது தூது தும்பு தென்பட்டால் நாங்களே அதைத் துடைப்போம். ஏதாவது கீழே விழுந்தால் நாங்களே குனிந்து பொறுக்கிப் போடுவோம். இதைக் கவனிக்கும் ஊழியர்களும் அச்சாக அதையே செய்கிறார்கள். நம்மை நாமே தொடர்ந்து சுயபரிசோதனை செய்து கொள்வதும், அடுத்த இலக்கை நோக்கி முன்னேறுவதும் அரவிந்தின் வாழ்க்கை முறைகள்'!

 

பலசுவாரஸ்யமான முரண்பாடுகள்! இவர்கள் மிகவும் மென்மையான மனிதர்கள்ஆனால் வேலை என்று வந்துவிட்டால் அடிமை போலப் பிழிந்தெடுத்துவிடுவார்கள். அதே சமயம், தானே முதல் ஆளாகக் களத்தில் நின்று உழைப்பார்கள். தங்கள் ஊழியர்களின் மேல் நிறைய அக்கறை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அவர்களைத் தத்தம் திறமையின் எல்லைவரைப் போய் நிற்க விரட்டுவார்கள். அந்த எல்லையைத் தொட்ட பிறகு 'இன்னம் கொஞ்சம் ஓடு!' என்பார்கள். மனிதர்களைப் பின்னாலிருந்து செலுத்திச் செலுத்தி, சாதிக்க முடியாத சாதனைகளைச் சாதிக்க வைப்பார்கள்.

 

அரவிந்தின் 'பேராசை' அதிகரித்துக் கொண்டே போகிறது. 'இது வரை எவ்வளவு செய்து முடித்திருக்கிறோம்' என்பது முக்கியமல்ல; இன்னும் எவ்வளவு மீதியிருக்கிறது? என்பதுதான் அவர்கள் அளவுகோல். இந்தியாவில் பார்வையின்மையை ஒழிப்பது என்பதில் ஆரம்பித்து, இப்போது உலக அளவிலேயே அதைச் செய்வது என்ற இலக்கை எடுத்துக் கொண்டுவிட்டார்கள்.

 

அரவிந்தின் கதையிலிருந்து ஒரு முக்கிய பாடம் கிடைக்கிறது என்றால், அது 'அகிலத்தை நம்மாலும் அசைக்க முடியும்' என்பதுதான். எல்லாமே ஒரு கனவிலிருந்துதான் ஆரம்பமாகிறது. 'யாராக இருந்தால் எனக்கென்ன? என்று அலட்சியம், எது நடந்தால் எனக்கென்ன என்ற மனநிலையும், அந்தக் கனவின் கை கால்கள்'.

 

அரவிந்த் கண் மருத்துவமனை சாதனை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்:

 

24 இலட்சம் கண் புறநோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள்.

2,86,000 காடராகட் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன ஒரு வருடத்திற்கு.

உலகத்திலேயே பெரிய கண் சிகிச்சை கல்வியகம் ஹார்வாட், ஜான்ஸ் ஹாப்கின்ஸ், யேல் போன்ற புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கழைலக்கழகங்களின் மாணவர்கள் பயிற்சிக்காக வருமிடம்.

அறுவை சகிச்சை செய்து கண்ணுக்குள்ளேயே பொருத்தப்படும் இன்ட்ரா ஆக்குலர் லென்சுகள் (IoL) சந்தைக்கு வந்தபொழுது இதன் விலை 5000 ரூபாய். இந்த லென்சுகளை தாமே உற்பத்தி செய்து 200 ரூபாய்க்கு விற்று, உலகின் IOL லென்சுகள் வரலாற்றில் புதிய சகாப்தம் படைத்த நிறுவனம்.

தொண்டு நிறுவனங்களுக்காக மட்டும் 60 இலட்சம் லென்சுகளை தயாரித்திருக்கிறார்கள்.

இந்தியா மட்டுமின்றி உலகின் 85 நாடுகளுக்கு IOL லென்சுகளை ஏற்றுமதி செய்கின்ற நிறுவனம்.

இங்குள்ள ஒவ்வொரு மருத்துவரும் வருடத்துக்க 2000 அறுவை சிகிச்சைகள் செய்கிறார்கள்.

ஒவ்வொரு மருத்துவரும் ஒரு நாளைக்கு சராசரியாக 25 முதல் 30 அறுவை சிகிச்சை செய்கிறார்கள். அதுவும் காலை ஏழுமணி முதல் முற்பகல் வரை மட்டுமே. பிற்பகலில் அறுவை சிகிச்சைகள் கிடையாது. அறுவை சிகிச்சை அறையை சுத்தப்படுத்தி அடுத்த நாளைக்குத் தயாராக்குவதற்காக இந்த இடைவெளி.

குறைந்த லாபம். நிறைவான சேவை!!!

 

Nandri : http://ceoblog.kapsystem.com/

 

Monday, December 13, 2010

தினம் ஒரு தகவல் : புதிய சிந்தனை

வெற்றிகரமான புதிய சிந்தனைகளை எழவிடாமல் தடுப்பது நம்முடைய அறிவு அல்ல; உணர்ச்சிகள் தான். வரலாறு, அனுபவம் போன்றவை நமக்குப் பல உணர்ச்சி பூர்வமான தடைகள் போட்டு வைத்திருக்கின்றன. அந்தத் தடையை மீறிச் சிந்திக்கும் போதுதான் நம் பார்வை வேறு திசையில் போகும். அங்கேதான் புதுமையும் பிறக்கும்.

புதிய சிந்தனைகளைத் தடுக்கும் அணைகள் என்று சொல்லத் தக்கவை மூன்று உண்டு:

 

•             நாம் செய்ய நினைப்பதற்கு முன்மாதிரிகள் ஏதாவது உண்டா என்று தேடுவது.

•             இதைச் செய்வது ஏன் முடியாது என்று சாக்குப் போக்குகள் எழும்போது அவற்றை ஒப்புக்கொண்டு அங்கேயே நிறுத்திவிடுவது.

•             ஏற்கனவே தேடிச் சலித்த இடங்களிலேயே திரும்பத் திரும்பப் புதிய ஐடியாக்களைத் தேடுவது.

 

முன் மாதிரிகளைத் தேடும்படலம் ஆரம்பிக்கும் போது கேட்கப்படும் முதல் கேள்வி, 'இதற்கு முன் யாராவது இப்படிச் செய்திருக்கிறார்களா?' என்பதுதான். இதுவரை செய்யப்படாவிட்டால் இனியும் அது முடியாத காரியம். முடியக்கூடியதாக இருந்தால், யாராவது இதற்குள் செய்திருப்பார்களே!!! முன் மாதிரிகளைத் தேடுவது என்ற அணை, நம்முடைய அடிமை மனப்பான்மையிலிருந்து எழுவது.

 

டாக்டர். துவாரகாநாத், டைட்டன் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர்; நுண்பொறியியல் துறைத்தலைவர்; இதற்கு முன் அவர் எச்.எம்.டி நிறுவனத்தில் வேலை செய்த அனுபவத்தைப் பற்றிச் சொல்வார்: ஏதாவது புதுமையாகவோ, வித்தியாசமாகவோ ஒரு ஐடியாவை எடுத்துக்கொண்டு தன் மேலதிகாரிகளிடம் பேசுவார். அந்த அதிகாரிகள் ஜப்பானில் சிட்டிஸன் நிறுவனத்தில் 18 மாதங்கள் வேலை செய்துவிட்டு வந்திருப்பவர்கள். 'ஜப்பானியர்களாலேயே ஒன்றைச் செய்ய முடியவில்லை என்றால், அது வேறு யாராலும் முடியாது. எனவே இந்த யோசனை சரிவராது' என்று நிராகரித்து விடுவார்கள்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, கடைசியில் துவாரகாநாத் அதிகாரிகளுக்கு தெரியாமல் நேரடியாக சிட்டிஸனை அணுகினார். அவர் சொன்னதைக் கேட்ட ஜப்பானியர்கள் 'அருமையான ஐடியா' என்று துள்ளக் குதித்தார்கள். 'இந்த ப்ராஜெக்டில் உங்களுடன் நாங்களும் சேர்ந்து கொள்கிறோம்' என்று முன் வந்தார்கள். எனவே, முதல் அணையை உடைப்பதற்கு தேவை, ஒரு முன்னோடியின் மனநிலை. 'முடிந்தால் இதற்கு ஒரு வழி கண்டுபிடிப்போம். இல்லாவிட்டால் நாமே ஒரு வழியை உருவாக்குவோம்' என்ற மனநிலை.

 

புதிய சிந்தனை:

செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை. செய்வதற்கு ஒரு ஐடியா இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்! அதை கண்டுபிடிக்கும் வரை அவருக்குத் தூக்கம் வராது.

 

வெற்றிக்கான இரண்டாவது மனநிலை, பாசிட்டிவ் ஆகச் சிந்திப்பது. 'ஏன் முடியாது?' என்று பேசிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, 'எப்படியெல்லாம் செய்ய முடியும்?' என்று யோசிப்பது.

Sunday, December 12, 2010

தினம் ஒரு தகவல் : சேவை மனப்பான்மை (Thaught for the Day)

சேவை மனப்பான்மை

"ஏழை மக்களுக்குச் செய்கின்ற சேவை, கடவுளுக்கு நேராக சென்று சேர்ந்துவிடும். கடவுளைத் தரிசிக்க நாள்கணக்கில் வரிசையில் நின்று உண்டியலில் போடப்படுகிற பணம் மக்களாகிய கடவுளிடம் வராது".

'மக்கள் சேவை மகேசன் சேவை' என்பது சேவை பற்றி நம் முன்னோர்கள் கூறியது. ஆனால் இப்பொழுது இந்த வாசகம் அரசியல் தலைவர்கள் நகைச்சுயைாகப் பயன்படுத்துகிற வாசகம். கடவுள் சிலைக்கு ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு தரவேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறோம்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் யாத்திரைக்குப் போகும் வழியில் அநேக குழந்தைகள் உடைகள் இன்றி இருந்ததைப் பார்த்து யாத்திரையையே நிறுத்தினார். சீடர்களிடம் அவர்களுக்கு உடைகள் வாங்க உடனடியாக ஏற்பாடு செய்யக் கேட்டார். 'நம்மிடம் இருக்கும் பணத்தில் உடைகள் வாங்கிவிட்டால், யாத்திரை போக முடியாது. பகவானைத் தரிசிக்க முடியாது' என்று சீடர்கள் சொல்ல, 'பகவானை இந்தக் குழந்தைகளிடமிருந்து இல்லாமல் கோயில்களிலா தரிசிக்க முடியும்?' என்று கேட்டார். அந்த பக்குவம்தான் சேவை.

காந்திக்கு ஏற்பட்ட சோதனைபீதிகர்வா என்ற கிராமத்திற்கு சென்று இருந்தபோது, அங்கு இருந்த சில பெண்கள் மிகவும் அழுக்காயிருந்த ஆடைகளை உடுத்தியிருந்ததைக் கண்டார். அப்பெண்கள் தங்கள் ஆடைகளை ஏன் துவைத்துக் கட்டுவதில்லை என்று கேட்கும்படி மனைவியிடம் கூறினார். கஸ்துரிபா அவர்களும் சென்று அவர்களோடு பேசினார்கள். அதில் ஒரு பெண், தன் குடிசைக்குள் அழைத்துச் சென்று பின்வருமாறு கூறினாள். "வேறு ஆடைகள் வைத்திருக்கும் பெட்டியோ, அலமாரியோ இங்கே இருக்கிறதா பாருங்கள். எனக்கு இருப்பது நான் கட்டியிருக்கும் ஒரு புடவைதான்; இதை எப்படி துவைப்பது? மகாத்மாவிடம் சொல்லி எனக்கு இன்னொரு புடவை வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்கள். அப்பொழுது தினமும் நான் குளித்துத் துணிகளைச் சுத்தமாக வைத்திருப்பதாக வாக்குறுதியளிக்க முடியும்".

நண்பர்களே, இது போன்ற நிலைமைகள் அறையாடை மனிதர் மகாத்மா காந்தி சுதந்திரம் வாங்கித் தருவதற்கு முன்பு மட்டுமல்ல. இன்றும் நமது கிரமாப்புறங்களில் பல்வேறு குழந்தைகள் இந்த நிலைமையிலேயே பள்ளிக்குச் செல்கிறார்கள்.

நாம் மேலே பார்த்த காந்தியோ, இராமகிருஷ்ண பரமஹம்சரோ பணத்தை வைத்துக் கொண்டு சேவைக்குச் செல்லவில்லை. தன் மனத்தினால் சேவை செய்தார்கள். 

"வாருங்கள் நண்பர்களே, நாம் ஒவ்வொருவரும், சுதந்திர இந்தியாவை கல்வியறிவுள்ள இந்தியாவாகவும் எழுச்சிபெற்ற இந்தியாவாகவும் மாற்றுவோம்."

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

 

Nandri : http://ceoblog.kapsystem.com/

Thursday, December 9, 2010

தினம் ஒரு தகவல் : எளிமை

எளிமை

மகாத்மா காந்தி தனது துணிகளைத் தாமே துவைத்து சலவை செய்தார். தமக்குத் தாமே தலைமுடி வெட்டிக் கொண்டார். தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியதும், காந்தி தனது மனைவி கஸ்தூரிபாவுடன் நாட்டு நிலவரம் அறிய, நீண்ட பயணம் மேற்கொண்டார்.

ஒரு பித்தளைப் பாத்திரம், முரட்டுக் கம்பளியினாலான ஒரு மேற்சட்டை, ஒரு வேட்டி, ஒரு துண்டு, ஒரு உள் சட்டை, ஒரு துப்பட்டி, தண்ணீர்ச் செம்பு அடங்கிய ஒரு சாக்குப் பையுடன் இந்தியா முழுவதும் சுற்றி வந்தார். நாள்காட்டித் தாள் உட்பட எந்தத் தாளையும் கிழித்தெறியாமல் குறிப்பு எழுதப் பயன்படுத்தினார்.

தேசப்பிதா பீகாரில் பயணம் செய்தபோது, அவருக்கு உதவியாக இருந்த மனுபென், காந்தி பயன்படுத்தும் பென்சில் மிகவும் சிறியதாகி விட்டதால், அதை மாற்றி ஒரு புது பென்சிலை வைத்தார். மகாத்மா நள்ளிரவில் மனுவை எழுப்பி, "எனது சிறிய பென்சிலைக் கொண்டு வா" என்றார். தூக்கக் கலக்கத்தில் தேடிய மனு கையில் அந்தச் சிறிய பென்சில் சிக்கவில்லை. "சரி, காலையில் தேடு. இப்போது தூங்கு" என்றார் பாபுஜி.

விடியற்காலை மூன்றரை மணிக்குப் பிரார்த்தனை முடிந்ததும் மனுவிடம் பென்சிலை நினைவூட்டினார். அதிக நேரம் தேடி ஒரு வழியாக அந்தப் பென்சிலைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்த மனுவிடம். "கிடைத்து விட்டதா? நல்லது இப்போது தேவையில்லை. பத்திரமாக எடுத்து வை!" என்று அண்ணல் சொன்னதும் மனுவுக்கு உள்ளூரக் கோபம் வந்தது. டில்லி திரும்பியதும் இரு வாரம் கழிந்து அந்தப் பென்சிலை பாபுஜி கேட்டதும் மனு கொண்டு வந்து கொடுத்ததார். "மகளே, நீ என் சோதனையில் தேறிவிட்டாய். நமது நாட்டின் ஏழ்மையை நீ அறிவாய். பல்லாயிரக்கணக்கான சிறுவர்களுக்கு இந்தச் சிறிய பென்சில்கூட இல்லை. இதைத் தூக்கி எறிவதற்கு பதிலாக இன்னும் எவ்வளவோ எழுதலாம். ஒரு துண்டு பென்சில் ஒரு துண்டுத் தங்கத்துக்குச் சமம்!" என்றார் மகாத்மா.

எல்லா வசதிகளும், அனுபவிக்க வாய்ப்புகளும் ஆண்டவன் வழங்கியிருந்தபோதும், ஒன்றும் இல்லாதவனைப் போல் வாழ்வதே எளிமை. பகட்டிலும் ஆடம்பரத்திலும்தான் சமூக கெளரவம் இருப்பதாக, நாம் மாயச் சிந்தனையில் மயங்கிக் கிடக்கிறோம். உண்மையில், நாம் ஒவ்வொரு நாளும் நமக்காக வாழ்வதே இல்லை. ஏதோவொரு வகையில் நம்மை ஊர் மெச்ச வேண்டும் என்றே விரும்புகிறோம். இதுவே அநாவசியத் தேவைகளில் நம்மை அலைக்கழிக்கிறது. தேவைகளின் பெருக்கத்தில் நிம்மதி பறிபோகிறது.

நான்கு சுவருக்குள் இருக்கும்போது நாற்பது ரூபாய் நூல் புடவையில் நிறைவு காணும் பெண் மனம், உறவுகள் சங்கமிக்கும் திருமண விழாவில் பத்தாயிரம் ரூபாய் பட்டுப் புடவையில்தான் பரவசம் கொள்கிறது. பிறர் பார்ப்பதற்காகத்தான் நம் அனைவருக்கும் ஆடம்பரம் அவசியப்படுகிறது. இந்த உதாரணம் எந்த ஒரு பெண்ணையும் குற்றம் அல்லது குறை கூறுவதற்காக கூறப்படவில்லை. எளிமையின் இலக்கணத்திற்காக கூறப்பட்டது.

எளிமைக்கான உதாரணங்கள்:

·         எளிமைக்கு சமூக கெளரவம் சாத்தியம் இல்லையெனில், அரை நிர்வாண காந்தியை அகிலமே தொழுததே… அது எப்படி?

·         குவித்து வைக்கும் செல்வத்தால்தான் சிறப்பு வந்து சேரும் என்றால், கூரையைத் தவிர வேறெந்த சொத்தும் இல்லாத தோழர் ஜீவாவை இன்றும் சமூகம் போற்றுகிறதே…அதன் இரகசியம் என்ன?

·         காமராஜர் கண்மூடினார். அவர் வாழ்ந்த வீட்டை அதன் உரிமையாளர் எடுத்துக் கொண்டார். அவர் பயன்படுத்திய காரைக் கட்சி எடுத்துக் கொண்டது. அவருடைய உடலை நெருப்பு எடுத்துக் கொண்டது. அவரது பெயரை வரலாறு எடுத்துக் கொண்டது.

·         காந்தியடிகள் வலியுறுத்திய மதுவிலக்கு, தீண்டாமை என்ற காரணத்திற்காக, மதுவை ஒழிக்க சேலம் தாதம்பட்டியில் தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை ஒரே நாளில் வெட்டினார் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். கதர் மூட்டையைத் தலையிலும் இராட்டையைத் தோளிலும் சுமந்து ஊர்தோறும் சென்று கதரைப் பரப்பினார்.

·         எளிமையின் சின்னமாக விளங்கியவர் நேரு. ஒரு முறை காங்கிரஸ் செயற்குழு கூடியபோது இடைவெளியில் நிஜலிங்கப்பா, 'உங்களைப் போன்ற செல்வச்சீமான்களா நாங்கள்?' என்று சொன்னதும், 'என் சட்டையைப் பாருங்கள். கிழிந்த இடத்தில் தையல் போட்டிருக்கேன். செல்வச் சீமானின் சட்டை இப்படியா இருக்கும்? பிரதமர் சம்பளத்தில் செலவு போக மிஞ்சுவது மாதம்தோறும் ஒன்பது ரூபாய்தான்' என்று எளிமையின் இலக்கணமாக கூறினார்.

 

தினம் ஒரு தகவல் : காந்தியின் வாழ்க்கை வரலாறு

1869ல் குஜராத் மாநிலம் போர்பந்தரில் ஒரு ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவர் மோகன்தாஸ்கரம்சந்த் காந்தி. பன்னிரண்டாவது வயதில் பார்த்த 'அரிச்சந்திரா' நாடகம், அவருக்குள் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. விசுவாமித்திரர் நடத்திய சோதனைகளை எல்லாம் 'மன உறுதியால் தாங்கிக் கொண்டேன்' என நாடகத்தில் அரிச்சந்திரன் சொன்னதைக் கேட்டு, உண்மையை மட்டுமே பேசும் புதிய மனிதராக மாறினார். அவர் மன உறுதி மற்றும் நேர்மையை வெளிநாடுகளில் படிக்கச் சென்றபோதோ அல்லது கடும் நோயுடன் மரணப் போராட்டம் நடத்திய போதோ எப்போதும் கைவிட்டதேயில்லை. ஒரு வழக்கறிஞராக தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றவர் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்ற வழக்குகளைவிட, நீதிமன்றத்துக்கு வெளியே பேசித் தீர்த்துவைத்த வழக்குகள்தான் அதிகம். தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த நிறவெறியும் அடக்குமுறையும் காந்தியை ஒரு போராட்டக்காரராக மாற்றியது.

போராட்டம் என்றால் வெட்டு, குத்து என்று ரத்தம் சிந்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் உலகிலேயே முதல்முறையாக 'அஹிம்சை' போராட்டத்தை அறிமுகப்படுத்தினார். "ஆயுதம் கொண்டு தாக்குவதைவிட, எதிரியின் முன் மனஉறுதியுடன் நின்று சாத்வீகமாக போராடுவது தான் உண்மையான வீரம். எதிரியிடம் காட்ட வேண்டியது எதிர்ப்பை மட்டுமே தவிர, வன்முறையல்ல" என்ற காந்தியின் அஹிம்சை போராட்டத்தை ஆரம்பத்தில் கிண்டலும் கேலியும் செய்தார்கள். ஆனால் இந்த கோட்பாடுதான் சிதறிக்கிடந்த இந்திய சுதந்திரதாகத்தை ஒன்று சேர்த்து வலிமையாக்கியது. அதிக எண்ணிக்கையில் பெண்களை சுதந்திரப் போராட்டத்தில் இணைத்தது. ஆனாலும் இந்த போராட்டத்தின் வெற்றி குறித்து சந்தேகங்கள் எழும்போது, "மன உறுதியுடன் போராடினார், வெற்றி நிச்சயம்" என்று உறுதியுடன் சொன்னார் மகாத்மா காந்தி.

1930ம் வருடம் 61 வயதான காந்தி உப்புக்கு வரி போட்ட ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்து தண்டியாத்திரையை தொடங்கினார். 241மைல் தூரத்தை 24 நாட்களில் கடந்த காந்தி ஆயிரக்கணக்கான காவலர்கள் முன்னிலையில் தண்டியில் உப்பு எடுத்தார். நாடெங்கும் பல்வேறு தலைவர்கள் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள். காந்தியின் மன உறுதியையும் அஹிம்சையையும் பலத்தையும் கண்டு மக்கள் மலைத்து நிற்க ஆங்கிலேயர்கள் பயந்து போனார்கள்.

1947ம் வருடம் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால் இந்தியாவுக்கு கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் கிடைத்தது. இந்தியாவின் தலைமைப் பொறுப்பு தேடி வந்ததும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் தீண்டாமை, ஏழ்மை, மதக்கலவரம் போன்றவற்றுக்கு எதிராக மன உறுதியுடன் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தார்.

120 வயது வரை வாழ்ந்தால் மட்டுமே தான் நினைத்திருக்கும் எல்லா காரியங்களையும் செய்து முடிக்க முடியும் என்ற காந்திஜியை 78வது வயதில் மூன்று துப்பாக்கி குண்டுகளுடன் முடித்து வைத்தான் கோட்ஸே என்ற கொடியவன். காந்தி மறைந்தாலும், மனஉறுதி எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் வெற்றி உருவத்தில் அவரை தரிசிக்க முடியும்.

Nandri : http://ceoblog.kapsystem.com/