கோவில் கும்பாபிஷேகம்

Saturday, September 12, 2015

திருமானூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

திருமானூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

 

திருமானூர், 

திருமானூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் சாலை மறியல்

திருமானூர் அருகே கீழப்பழுர் போலீஸ் சரகத்தை சேர்ந்தது இடையத்தாங்குடி கிராமம். இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள பொய்யூர் கிராமத்தில் இருந்து குடிதண்ணீர் குழாய் மூலம் கொண்டு வரப்பட்டு இடையத்தாங்குடியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு, அங்கிருந்து அந்த கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இடையத்தாங்குடி கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பட்டால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி தடையில்லாமல் குடிநீர் வினியோகிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடையத்தாங்குடியில் அரியலூர் சுண்டக்குடி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்த கீழப்பழுர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், ராஜாராம், செல்வம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஜெய்சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களது கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டக்காரர்களிடம் போலீசார் கூறினர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.