கோவில் கும்பாபிஷேகம்

Thursday, January 18, 2018

அச்சுறுத்தும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள்! சிமென்ட் ஆலைகளுக்கு எதிராகக் கொந்தளித்த கிராம மக்கள்

அச்சுறுத்தும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள்! சிமென்ட் ஆலைகளுக்கு எதிராகக் கொந்தளித்த கிராம மக்கள்



 எம்.திலீபன்



சிமென்ட் ஆலைகளுக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூடும் வரையிலும் விடப்போவதில்லை என்று பனங்கூர் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அரியலூர் மாவட்டம் பனங்கூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தைச் சுற்றி ராம்கோ, செட்டிநாடு, டால்மியா மற்றும் அரசு சிமென்ட் ஆலைகளுக்குச் சொந்தமான 7-க்கும் மேற்பட்ட சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் உள்ளன. இதில் சுரங்கம் தோன்றுவதற்காக இரவு நேரத்தில் வெடி வைப்பதால் வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இரவு பகல் பாராமல் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசடைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நோய்கள் ஏற்படுவதோடு விவசாயமும் பாதிக்கப்படுகின்றன.

அடிக்கடி பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. அரசின் விதிகளை மீறி அதிக ஆழத்தில் சுணணாம்புக்கல் சுரங்கங்கள் தோண்டப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள கிராமங்களிலும் குடிநீர் பிரச்னை ஏற்படுகின்றன. இவ்வாறு மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை அரசு ஆய்வு செய்து அரசின் விதிமுறைகளை மீறிய சுரங்கங்களை மூட வேண்டும். அந்த ஆலையின் உரிமத்தைத் தடை செய்ய வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பனங்கூர் கிராமத்தில் உள்ள இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் வெடி வைக்க எதிர்ப்பு: பனகூர் கிராமமக்கள் உண்ணாவிரதம்

சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் வெடி வைக்க எதிர்ப்பு: பனகூர் கிராமமக்கள் உண்ணாவிரதம்



அரியலூர் அருகே சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் வெடிவைப்பதால் தங்களது வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து, பனங்கூர் கிராம மக்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

அரியலூரில் இயங்கி வரும் தனியார் சிமென்ட் ஆலைகளுக்குச் சொந்தமான சுண்ணாம்புச் சுரங்கம் பனங்கூர் கிராமப் பகுதியில் உள்ளது. இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் சுண்ணாம்புக்கற்கள் ஏற்றிச் செல்லப்படுகிறது. இந்நிலையில், சுரங்கத்தில் சுண்ணாம்புக்கற்களை வெட்டிஎடுக்க அவ்வப்போது வெடி உபயோகப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனால்,பனங்கூர் கிராமத்தில் உள்ள வீடுகள் பாதிக்கப்படுவதாவும், பல வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், வெடி சத்தத்தால் இரவு நேரங்களில் தூங்க முடியவில்லை என்றும், கிராமத்தில் உள்ள சாலையில் சுண்ணாம்புக் கற்களை ஏற்றி வேகமாகச் செல்லும் லாரிகளால் அதிகமான புழுதிகள் ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகம்,தனியார் சிமென்ட் அலை நிர்வாகம் ஆகியோரிடம் பொதுமக்கள் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த பனங்கூர் கிராம மக்கள், புதன்கிழமை சுண்ணாம்புக் கல் சுரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வட்டாட்சியர் முத்துலட்சுமி மற்றும் சுண்ணாப்புக் கல் சுரங்க அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் உடன்படாத பொதுமக்கள் அங்குள்ள மாரியம்மன் கோயில் அருகே பந்தல் அமைத்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

Friday, January 12, 2018

ஆலந்துரையார்கட்டளை கிராமத்தில் அம்மா திட்ட முகாமில் நலத் திட்ட உதவிகள்

அம்மா திட்ட முகாமில்  நலத் திட்ட உதவிகள்  


அரியலூர் வட்டம், வாலாஜாநகரம், ஆலந்துரையார்கட்டளை, உடையார்பாளையம் வட்டம் எரவாங்குடி, இடங்கண்ணி, ஆண்டிமடம் வட்டம் அழகாபுரம், செந்துறை வட்டம் நக்கம்பாடி ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


அந்தந்தப் பகுதி வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற்ற முகாம்களில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்,சாதி சான்றிதழ் கேட்டு பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Sunday, January 7, 2018

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற  விண்ணப்பிக்கலாம்


எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மற்றும் மேல்நிலை தேர்ச்சி, பட்டப்படிப்பு ஆகிய கல்வித் தகுதிகளைப் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து இருக்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.  

விண்ணப்பதாரர்கள் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிகள் எனில் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 31.12.2017 அன்று 45 வயதுக்குள்ளும், இதர அனைத்து  வகுப்பினர்க்கும் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலும் மாணவ மாணவியராக இருத்தல் கூடாது.

ஆயினும் தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50,000- க்கும் மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு ஏதும் இல்லை.
பள்ளி கல்விச் சான்றிதழ்கள் மற்றும்  கல்லூரி படிப்புச் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் , வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேற்கண்ட சான்றுகளுடன் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் 28.2.2018-க்குள் முற்பகலில் வேலைநாள்களில் நேரில் புதிய விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என ஆட்சியர் க.லட்சுமிபிரியா அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tuesday, January 2, 2018

அரசு மருத்துவமனையில்  அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட மாவட்ட ஆட்சியர்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிப்பிரியா அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். 


கடந்த சில நாட்களாக கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இவர் திங்கள்கிழமை அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்றார்.   அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக குடல்வால் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர். அதற்கு ஆட்சியர் அங்கேயே அறுவைச் சிகிச்சை செய்யுமாறு கூறினார்.

இதைத் தொடர்ந்து அன்றிரவு அரசு மருத்துவமனையிலேயே அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. ஆட்சியர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அரசு அதிகாரிகள்,பொதுமக்கள் அவரிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்துகொண்ட ஆட்சியரின் செயல்  மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. இதை அரசியல்வாதிகளும் கடைப்பிடித்தால் அரசு மருத்துவமனைகளின் தரம் உயரும் என்கின்றனர் பொதுமக்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

Monday, January 1, 2018

மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம்  அமைக்க விண்ணப்பிக்கலாம்


சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனக் கருவிகள் அமைக்கும் அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் வகையில், ரூ.7.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அரியலூர் மாவட்டத்தில் 1,820 மெ.டன் யூரியா, 803 மெ.டன் டி.ஏ.பி, 719 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 1034 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் போதுமான அளவு இருப்பில் உள்ளது. இதுவரை சான்று பெற்ற நெல்விதைகள் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் 229 மெ.டன், தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம் 92 மெ.டன் என 321 மெ.டன் விநியோகம்  செய்யப்பட்டுள்ளது.

 தற்போது வேளாண் விரிவாக்க மையங்களில் 29 மெ.டன் மற்றும் தனியார் கடைகளில் 4 மெ.டன் ஆக மொத்தம் 33 மெ.டன் நெல் விதைகள் இருப்பில் உள்ளது.  தற்போது பருவமழை குறைவாக கிடைத்து வருவதால் நிலத்தடி நீரின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல் நிலத்தடி நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு வேளாண் மற்றும் தோட்டக் கலைத் துறைகள் மூலம் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனக் கருவிகளை அமைக்கும் அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு  மானியமாக வழங்கும் வகையில், ரூ.7.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   

சிறு,குறு ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75% மானியத்திலும் பாசனக் கருவிகளை தங்களது வயல்களில் நிர்மானித்துக் கொள்ள மானியம் வழங்கப்படும். 

விவசாயிகள் தங்கள் பங்குத் தொகை வங்கி வரைவோலையாக விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். சிறு,குறு ஆதிதிராவிட விவசாயிகள் வருவாய்த் துறையில் சான்று பெற்று பாசனக் கருவிகளை அமைக்க விண்ணப்பிக்க வேண்டும்.  
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற்றிட சொந்த நிலத்தில் பயிர் சாகுபடி செய்து வருவதற்கான சிட்டா மற்றும் அடங்கல், வயல் வரைபடம் மற்றும் மின் இணைப்புடன் நீர் ஆதாரம் உள்ளதற்கான சான்று உள்ளிட்ட இதர ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் க.லட்சுமிபிரியா அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அடிப்படை வசதியில்லாத ஓரியூர் அரசுப் பள்ளி

அடிப்படை வசதியில்லாத ஓரியூர் அரசுப் பள்ளி

photo (C) - Google Search

அரியலூர் அருகேயுள்ள ஓரியூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எந்தவித அடிப்படை வசதியுமின்றி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

அரியலூரை அடுத்த சுண்டக்குடி அருகே ஓரியூர் கிராமத்தில் 5 ஆம் வகுப்பு வரையுள்ள அரசு தொடக்கப் பள்ளியில்,  100-க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் படித்து  வருகின்றனர்.  இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.  

குடிநீர் குழாய்கள் அனைத்தும் உடைந்து காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு சாலையைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. 

பள்ளியில் இருக்கும் கழிவறைகள், முற்றிலும் சேதமடைந்துள்ளதால், இயற்கை உபாதையைக் கழிப்பதிலும் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

இதுதவிர பள்ளி வளாகத்தினுள் புதர் மற்றும் முள்செடிகள் நிறைந்து காணப்படுகின்றன.  சுற்றுச்சுவர் இல்லாததால் இரவுநேரங்களில் சமூக விரோத செயல்கள்  நடைபெறுகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள், பல முறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. 
 எனவே, இனியாவது ஓரியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.