கோவில் கும்பாபிஷேகம்

Sunday, January 12, 2014

தீண்டாமையை கடைபிடிக்காத மாவட்டமாக அரியலூரை உருவாக்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

அரியலூர் மாவட்டத்தை தீண்டாமையை கடை பிடிக்காத மாவட்டமாக உருவாக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் சரவண வேல்ராஜ் கூறினார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவி களை கலெக்டர் சரவணவேல் ராஜ் வழங்கி பேசியதாவது:
தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தீண்டாமை கடை பிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் ஆதிதிராவிடர் கிராமத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஊராட்சி வீதம் தேர்வு செய்து வருகிறது. தேர்வு செய்த ஊராட்சியில் உள்ள ஒரு கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டி ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தீண்டாமையை கடைபிடிக்காத மாவட்டம்
அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் 2013–2014–ஆம் ஆண்டு தீண்டாமையை கடை பிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக அரியலூர் ஊராட்சி ஒன்றியம், ஆலந்துறையார்கட்டளை ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு பரிசுத்தொகை அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (திட்டம்) வழங்கப்பட்டுள்ளது. எனவே, நமது மாவட்டத்தில் ஒரு ஊராட்சி மட்டுமன்றி 201 ஊராட்சிகளும் தீண்டாமையை கடைபிடிக்காத கிராமமாக திகழ்ந்து நமது மாவட்டத்தை தீண்டமை கடைபிடிக்காத மாவட்டமாக உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும்.
இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வேண்டி மொத்தம் 420 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
நலத்திட்ட உதவிகள்
கூட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம் வருவாய் கோட்டத்தை சேர்ந்த 12 பேருக்கு ரூ.5 லட் சத்து 10 ஆயிரம் முதல்அமைச்சரின் சாலை விபத்து நிவாரண நிதியுதவியும், ஒரு மாற்றுத் திறனாளிக்கு 3 சக்கர சைக்கிளும், அரியலூர், ஜெயங்கொண்டம் வட்டத்திற்குட்பட்ட 14 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ரூ.62 ஆயிரமும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களையும், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு இலவச சலவைப்பெட்டிகளும், புதுவாழ்வுத்திட்டத்தின் கீழ் 40 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அரியலூர் கோதண்ட ராமசாமி கோவிலில் நடை பெற்ற புத்தொளி பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட 19 அச்சகர்கள், பட்டாச் சாரியார்கள், ஓதுவார்களுக்கு சான்றிதழ்கள்,ரூ.26 ஆயிரத்து 450 மதிப்பில் ஊக்கத்தொகைக் கான காசோலைகளும், வேளாண் துறை சார்பில் செந்துறை வட்டத்திற்குட்பட்ட 13 விவசாயிகளுக்கு விவசாயிகள் ஒருங்கிணைந்த கையேடுகளும் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் துரை.மணி வேல் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அதிகாரி கருப்பசாமி, திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சடையப்ப விநாயகமூர்த்தி, உதவி ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) கோதண்ட ராமன், தனித்துணை கலெக்டர் ஜீனத்பானு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.