கோவில் கும்பாபிஷேகம்

Monday, February 10, 2014

எங்கள் பகுதி செய்தி: ஆயிரம் ஆண்டு பழைமையான காமரசவல்லி சௌந்தரேசுவரர் கோவில் குடமுழுக்கு

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், காமரசவல்லி பாலாம்பிகை உடனுறை சௌந்தரேசுவர சுவாமி கோவில் குடமுழுக்கு  ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

 

அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள காமரசவல்லி அருள்மிகு பாலாம்பிகை சமேத சௌந்தரேசுவர சுவாமி கோவில் சுந்தர சோழ மன்னரால் சுமார் 1050 ஆண்டுகளுக்கு முன்பு (கிபி.957-974) கட்டப்பட்டது. பரிஷத் மகாராஜா பாம்பு தீண்டி இறந்து விட அவரது மகன் ஜனமேஜெயராஜா  உலகில் உள்ள அனைத்து பாம்புகளும் அழிந்து விட எண்ணி சர்ப்ப யாகம் செய்த போது உலகில் உள்ள எல்லா பாம்புகளும் யாகத்தீயில் விழுந்து இறந்து விட பாம்புகளின் தலைவனான கார்கோடன்  மகாவிஷ்ணுவை நோக்கி தவமிருக்க மகாவிஷ்ணுவின் அறிவுரைப்படி இத்தலத்தில்  உள்ள சிவபெருமானை வழிபட்டு தனது குலம் தழைக்க வரத்தினை கடக லக்னம்,கடக ராசியில் பெற்றார். மேலும் ஸ்ரீகார்கோடேஸ்வரர்  இரண்டு கட்டளைகளை பிறப்பித்தார்.

 

தன்னை யார் வந்து வணங்கினாலும் சர்ப்ப தோஷ விளைவுகளான திருமணத்தடை, உத்தியோகத்தடை, புத்திரபாக்கியமின்மை, தம்பதிக்குள் மன வேற்றுமை, பிரிவுகள், கல்வித்தடை போன்றவற்றிற்கு நிவர்த்தி தலமாக இருக்க வேண்டும். இந்த ஊரில் யாரையும் ஸர்ப்பம் தீண்டக்கூடாது, அப்படியே தீண்டினாலும், உயிரிழக்கக்கூடாது. என்று உறுதி வாங்கிக் கொண்டார். அன்றிலிருந்து, இன்று வரை காமரசவல்லி கிராமத்தில் ஸர்ப்பம் தீண்டி இறந்தவர்கள் யாருமில்லை.  இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பழைமையான இத்திருத்தலத்தின் திருப்பணிகள் அரசு மானியம், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர்  பொது நல நிதி, ஸ்ரீரங்கம் கோவில் நிதி, மற்றும் நன்கொடையாளர்கள் நிதியை கொண்டும், சென்னையைச் சேர்ந்த  மகாலெட்சுமி சுப்பிரமணியன், ஜி.வெங்கடேஷ், மும்பை வை.ரகுநாதன், ஆகியோரின் பெருமுயற்சியாலும் நடைபெற்றது.

 

விழாவில் திருவையாறு ஆதீனம் கட்டளை தம்பிரான் மவுனகுருசாமிகள், துரை.மணிவேல் எம்எல்ஏ. மாவட்ட வருவாய் அலுவலர் கருப்பசாமி, உதவி ஆணையர்(இந்து சம்ய அறநிலையத்துறை) ஜெகநாதன்,திருக்கோவில் செயல் அலுவலர் மணி, வட்டாட்சியர் முருகன், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் அன்பழகன், மருத்துவர் மணிவண்ணன், காமரசவல்லி ஊராட்சி மன்றத் தலைவர் சிவாலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

நன்றி தினமணிக்கு

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க