கோவில் கும்பாபிஷேகம்

Wednesday, February 12, 2014

கைலாசநாதர் கோயில் குடமுழுக்கு

கைலாசநாதர் கோயில் குடமுழுக்கு

 

அரியலூர் அருகே அம்பலவர்கட்டளை கிராமத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

 

இந்தக் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழனால் (1012-1044) கட்டப்பட்டது. இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று பிச்சாண்டவருக்கு பூப்போடுதல் விழா சிறப்பாக நடைபெறும். அதேபோல, சித்திரை மாத அமாவாசையன்று அமுது படையல் விழாவும் நடைபெறும்.

 

திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலுக்கு அடுத்து, இக்கோயிலில் நவகிரகங்கள் அமைக்கப்படாமல் சனீஸ்வர பகவானுக்கு மட்டும் தனி சன்னதி அமைந்துள்ளது. இதில், ஒவ்வோர் ஆண்டும் சனிப்பெயர்ச்சியன்று சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெறும்.

 

இந்தக் கோயில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடமுழுக்கு நடைபெறாமல் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இதை அம்பலவர் கட்டளை கிராம மக்கள் மற்றும் இறையன்பர்கள் இணைந்து திருப்பணி செய்தனர். இதைத் தொடர்ந்து, குடமுழுக்கு விழா புதன்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக, கடந்த 10 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து 4 கால யாக பூஜைகள் நடைபெற்று புதன்கிழமை காலை பூர்ணாஹூதியும், அதைத் தொடர்ந்து யாத்ரா தானம், கலச புறப்பாடும் நடைபெற்று, சிவாச்சாரியார்கள் கும்பங்களுக்கு புனிதநீரை ஊற்றினர்.

 

குடமுழுக்கு விழாவில், அரியலூர் வட்டாட்சியர் முருகன், தொழிலதிபர் கதிர் கணேசன், சுண்டக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் க. மணிவண்ணன், ஊராட்சித் தலைவர் வேம்பு பாண்டியன், ஒன்றியக் குழு உறுப்பினர் கருணாநிதி மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க