கோவில் கும்பாபிஷேகம்

Friday, December 29, 2017

வீடுகளில் விரிசல்: சிமென்ட் ஆலை லாரிகளை சிறைபிடித்து போராட்டம்

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே சுண்ணாம்புக் கல் ஏற்றிவந்த லாரிகளை சிறைபிடித்து வாழைக்குழி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் கல்லக்குடி, அரியலூரில் இயங்கி வரும் தனியார் சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான சுண்ணாம்பு சுரங்கம் பெரியதிருக்கோணம் பகுதியில் உள்ளது. இந்தச் சுரங்கத்தில் சுண்ணாம்புக் கற்களை வெட்டிஎடுக்க அவ்வப்போது வெடி பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால், சுண்ணாம்புக்கல் சுரங்கம் அருகேயுள்ள வாழைக்குழி கிராமத்தில் உள்ள பல வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இரவு நேரங்களில் வெடிச் சத்தத்தால் தூங்க முடியவில்லை எனவும்சுண்ணாம்புக் கற்களை ஏற்றி வேகமாகச் செல்லும் லாரிகளால் அதிக புழுதி ஏற்படுவதாகவும் கூறி வாழைக்குழி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை அவ்வழியே சுண்ணாம்புக் கல் ஏற்றி வந்த 50-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கீழப்பழுவூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் வெடி உபயோகிக்காமல், பிரேக்கர் கொண்டு கற்களை வெட்டி எடுப்பதாகவும், பாரம் ஏற்றி வரும் லாரிகளை இனி மெதுவாக இயக்கிச் செல்வதாகவும்  கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் வாழைக்குழி கிராமத்தில் சுமார் 1 மணிநேரம் நீடித்தது.


No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க